தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி

தேர்வு முடிவு வெளிவந்த 2 நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி
              
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு
முடிவு வெளிவந்த 2 நாட்களில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது.

முதல் -அமைச்சர் அறிவுரை

தமிழக முதல் -அமைச்சர் அறிவுரைப்படி 2011-2012 ஆம் ஆண்டு மாணவர்கள் நல்ல முறையில் தேர்வு எழுதவேண்டும் என்று ஆணையிட்டார். அதன்படி நல்ல பல மாற்றங் களை தேர்வுத் துறையில் பள்ளிக் கல்வித்துறை செய்தது. எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. விடைத்தாள் முதல் பக்கத்தில் ரகசிய கோடு அறிமுகப்படுத்தப்பட்டது.


அதைத்தொடர்ந்து 2012- 2013-ம் ஆண்டு விடைத்தாள் முகப்புச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சீட்டு முழுக்க முழுக்க மாணவர்கள் நலன்கருதி கொண்டுவரப்பட்டது. அதாவது மாணவர்கள் தேர்வு எண்ணை எழுதவேண்டியதில்லை. தேர்வு எண் ஏற்கனவே அச்சாகி இருக்கும். கையெழுத்து மட்டும் போட்டால் போதும். ரகசிய கோடு இருப்பதால் விடைத்தாள் மதிப்பீடு செய்வதும், மதிப்பெண் கம்ப்யூட்டரில் பதிவு செய்யவும் வசதியாக உள்ளது. மேலும் விடைத்தாள் கடந்த வருடமே ஒரு புத்தகமாக வழங்கப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் கடந்த வருடம் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதை விட இந்த வருடம் மேலும் அதிகரிக்கவேண்டும்.

மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிட்ட பின்பு இணையதளத்தில் உள்ள மதிப்பெண் பட்டியலை மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற உயர்படிப்புக்கு மாணவர்கள் அனுப்புவார் கள். தேர்வு முடிவு வெளிவந்த பிறகு 10 நாட்கள் கழித்து நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி மாணவர்களுக்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இந்த வருடம் முதல் வழங்கப்பட உள்ளது.

இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிட்ட 2 நாட்களில் மாணவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழில் மதிப்பெண்கள், மாணவரின் புகைப்படம், மாணவரின் பெயர் உள்ளிட்ட தேவையான விவரங்கள் இருக்கும். இந்த சான்றிதழை அரசு தேர்வுத்துறை இயக்குனரக இணையதளத்தில் இருந்து பதிவிறக் கம் செய்து கொள்ளலாம். பின்னர் அந்த சான்றிதழில் மாணவர் படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெறவேண்டும்.

இந்த சான்றிதழை உயர் கல்வியில் சேர விண்ணப்பிக்கும் போது பயன்படுத்தலாம்.

இந்தியாவில் முதல் முறை

இந்த சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லும். இந்த தற்காலிக சான்றிதழ் வழங்குதல் இந்தியாவில் முதல் முறை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விண்ணப்பிக்க அசல் மதிப்பெண் சான்றிதழ் தேவை இல்லை. இந்த சான்றிதழ் போதுமானது.

இவ்வாறு த.சபீதா பேட்டி அளித்தார். பேட்டியின் போது அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன், இணை இயக்குனர் உமா ஆகியோர் உடன் இருந்தனர்.