தொழிற்கல்வியை மேம்படுத்த ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

சிதம்பரம்: மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வியை மேம்படுத்த வேண்டும் என தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அனுப்பியுள்ள மனு:
அனைத்து தொழிற்கல்வி பாடங்களுக்கும் கோடை விடுமுறையில் அரசு இலவச பாட புத்தகங்கள் வழங்க வேண்டும். தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தொழிற்கல்வி அனைத்து பாடங்களுக்கும் மூத்த ஆசிரியர்கள் மூலம் வினாத்தாள் தயாரிக்க வேண்டும். கணக்குப் பதிவியல், வங்கியியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களுக்கு இலவச வினா விடை வங்கி புத்தகம் தயாரித்து வழங்க வேண்டும். அரசு பொதுத் தேர்வின் போது தேர்வுநிலை, சிறப்பு நிலை தொழிற்கல்வி அசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வழங்க வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி மற்றும் கணனி பாடம் ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கோரிக்கை மனுவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியிடம் அளித்தனர். ஆசிரியர்கள் மோகன்குமார், ரவி, சீனிவாசன், கொளஞ்சிநாதன், முத்துக்குமரன் உடனிருந்தனர்.