மத்திய அரசு ஊழியர்களுக்கு பயிற்சி: அமைச்சரவை செயலர்களுக்கு உத்தரவு

புதுடில்லி: 'மத்திய அரசு ஊழியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், வாரந்தோறும் பயிற்சி அளிக்க வேண்டும்' என, அனைத்து அமைச்சக செயலர்களுக்கும், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

'மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் திறனை மேம்படுத்தவும், பொது அறிவை மேம்படுத்தவும், முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கூறியிருந்தார். பிரதமரின் இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் களம் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக, அனைத்து மத்திய அமைச்சகங்களின் செயலர்களுக்கும், பணியாளர் நலத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, அவர்கள் பணியாற்றும் அலுவலகத்திலேயே அல்லது பணியாற்றும் துறைகளிலேயே, வாரந்தோறும், ஒரு மணி நேரத்துக்கு பயிற்சி அளிக்கும்படி, ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை, அனைத்து அலுவலகங்களும் உடனடியாக செயல்படுத்துவதுடன், அதுபற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே இந்த உத்தரவை செயல்படுத்தியுள்ள நிறுவனங்கள், இந்த பயிற்சியின் தாக்கம் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். பயிற்சி அளிப்பதற்காக, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்றக் கூடாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.