காலியிடத்திற்கு கல்வித்தகுதியை நிர்ணயிக்காமல் தேர்வு:விளையாட்டு ஆணையம் மீது தேர்வாளர்கள் அதிருப்தி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், உதவிப் பொறியாளர் பதவிக்கு, முறையான கல்வித்தகுதியை நிர்ணயம் செய்யாமல் தேர்வு நடத்தியது, தேர்வாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

      நிரப்ப முடிவு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், காலியாக உள்ள, உதவிப் பொறியாளர்(விளையாட்டு தொழில்நுட்பம்) பணியிடத்தை நிரப்ப, முடிவு செய்யப்பட்டது.இதற்காக, ஆணையத்தின் செயற்குழுக் கூட்டத்தில், இப்பதவிக்கு ஏதேனும் ஒரு பொறியியல் பட்டம் மற்றும் எம்.டெக்., விளையாட்டு தொழில் நுட்பம், கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், ஆட்கள் தேர்வு செய்ய, விளம்பரம் செய்யப்பட்டது. பின், வேலை வாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்தவர்களுக்கு, தகுதி அடிப்படையில், கடந்த ஆகஸ்ட், 7ம் தேதி, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.கடந்த டிசம்பர், 11ம் தேதி, எழுத்து தேர்வும், ஜனவரி, 7ம் தேதி, நேர்முகத் தேர்வும் நடந்தது.அப்போது அதிகாரி ஒருவர், இப்பதவிக்கு, பி.இ., சிவில் முடித்து, விளையாட்டு தொழில்நுட்பத்தில், முதுகலை பட்டம் பெற்றவரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களில், ஒருவர் கூட, பி.இ., சிவில் முடிக்கவில்லை.அதைத் தொடர்ந்து, மீண்டும் புதிதாக, தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளனர். இது ஏற்கனவே தேர்வில் கலந்து கொண்டவர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ஏதேனும் ஒரு பொறியியல் பட்டம் என அறிவிப்பு செய்துவிட்டு, திடீரென கல்வித்தகுதியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பி.இ., பட்டம்:முன்னதாக, பி.இ., சிவில் முடித்திருக்க வேண்டும் என தெரிவித்திருந்தால், தேர்வில் மாணவர்கள் பங்கேற்றிருக்க மாட்டார்கள். மேலும், தமிழக அரசால் நடத்தப்படும், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., விளையாட்டு தொழில்நுட்பம் பிரிவில் சேர, ஏதேனும் ஒரு பிரிவில், பி.இ., பட்டம் பெற்றால் போதும்.அங்கு எம்.டெக்., பட்டம் பெற்றவர்கள் தான், நேர்முகத் தேர்வில் பங்கேற்றுள்ளனர். தற்போது, ஆணையம் எடுத்துள்ள புதிய முடிவால், பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., சேருவதற்கான கல்வித்தகுதியையும், மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, விளையாட்டுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:உதவிப் பொறியாளர் பதவிக்கு, பி.இ., சிவில் மற்றும் எம்.டெக், விளையாட்டு தொழில்நுட்பம் படித்தவர்களால், கட்டுமானப் பணியை மேற்கொள்ள முடியும்.பி.இ., சிவில் படிக்காதவர்கள், கட்டுமானப் பணி மேற்கொள்வது சிரமம் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தை, அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.செயற்குழுக் கூட்டத்தில், இது குறித்து ஆலோசிக்காததால், இப்பிரச்னை ஏற்பட்டது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.