பள்ளிகளில் ஒழுக்கத்தை போதிக்க புத்தகம்

விருதுநகர்: மாணவர்களிடையே அறநெறி, ஒழுக்கத்தை போதிக்க தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இலக்கியங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பொன்மொழிகள் வடிவிலான 'அறநெறிக் கருவூலம்' என்ற புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

சமீபகாலமாக பள்ளிகளில் குழு மோதல்கள் அதிகரித்துள்ளன. சமுதாயத்தில் நடக்கும் பிரச்னைகள் பள்ளிக்குள் எதிரொலிப்பதால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்கின்றன. தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'அறநெறிக்கருவூலம்' என்ற புத்தகத்தில் தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார்,நான்மணிக்கடிகை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், ஆத்திச்சூடி, நல்வழி, உலகநீதி, நன்னெறி போன்ற சிற்றிலக்கியங்கள், பாரதியார் புதிய ஆத்திச்சூடி, பாரதிதாசன் ஆத்திச்சூடி போன்ற இக்கால இலக்கியங்களில் இருந்தும் அறநெறியை உணர்த்தும் சிறந்த சிந்தனை கருத்துக்கள் ஓரிரு சொற்றொடரிலேயே பொன்மொழிகளாக தரப்பட்டுள்ளது.61 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம் முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மூலம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட உள்ளது. காலை இறைவணக்கம், நீதிபோதனை வகுப்புகளில் இக்கருத்துக்கள் மாணவர்களுக்கு கூறப்பட உள்ளன. இதன் மூலம் அவர்களிடையே நன்னெறி, ஒழுக்கம் வளர வாய்ப்பாக இருக்கும் என ,கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.