ராஜதானி தவிர மற்ற எல்லா ரயில்களிலும் புட் கோச் “கட்” – ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு?

ரயில்வே பட்ஜெட்டில் ராஜதானி ரயில்களைத் தவிர்த்து மற்ற அனைத்து ரயில்களிலும் உணவகப் பெட்டிகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படலாம் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளதாக
கூறப்படுகிறது. ரயில்வே பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கலாம் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில், உணவக பெட்டிகளை அகற்றி விட்டு ரயிலில் உணவு தயாரிக்கும் முறையை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, தயாரிக்கப்பட்ட உணவு மட்டும் சூடுபடுத் தப்பட்டு பயணிகளுக்கு விநியோகிக்கப்படுமாம். இதன் மூலமாக ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் அரசுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பயணிகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய ரயில்வே துறையினரோடு, தனியாரையும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் ஆன்ட்ராய்டு போனில் அதற்குரிய ஆப்ஸை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்மூலம் செய்யப்படும் உணவு ஆர்டர்கள், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் தனியாரால் விநியோகிக்கப்படும். மேலும் ஃபேஸ்புக் , டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரயில்வே பட்ஜெட் குறித்த மக்களின் கேள்விகளுக்கு அமைச்சர் நேரடியாக பதிலளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.