தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையில் தொடரும் விதிமீறல்: இட ஒதுக்கீடின்றி பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள்

அரசு அறிவிப்புக்கு மாறாக சில தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கி நடத்திவருகின்றன. இதனால் பிற்படுத்தப்பட்ட, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒவ்வொரு தனியார் பள்ளியும் 25 சதவீத
இடங்களில் ஏழை, எளிய மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த விதிமுறையை அமலாக்க ஏதுவாக, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக தொடங்கக்கூடாது என அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால், தனியார் பள்ளிகளின் கட்டண வசூலை பாதிக்கும் என்பதாலும், போட்டியைக் குறைத்துவிடலாம் என்பதாலும் பல பள்ளிகள் இந்த அறிவிப்பை பின்பற்றுவதில்லை. பல புகழ்பெற்ற பள்ளிகள் மாணவர் சேர்க்கை குறித்த விளம்பரங்களை அரசுப் பேருந்துகளிலேயே பகிரங்கமாக வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பள்ளி நிர்வாகங் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது. விதிகளை மீறி நடத்த முயன்ற மாணவர் சேர்க்கைகள் தடுக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை ஆய்வுகளின்போது விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் விதிமீறல்கள் நிற்கவில்லை.
இது தொடர்பாக கல்வி உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அமெரிக்கை வி.நாராயணனிடம் கேட்டபோது, “அரசு அதிகாரிகளின் பிள்ளை களே, 'எலைட்' என்று கருதப் படும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இதனால்தான் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தை அமலாக்க தயக்கம் நிலவுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டவை அல்ல என்றும் எல்கேஜி மற்றும் முதல் வகுப்பில் மட்டும்தான் இட ஒதுக்கீடு உள்ளதாகவும் தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. தங்கள் பள்ளிகளில் பணியாற்றும் ஓட்டுநர், பணியாளர் பிள்ளைகளை இந்தப் பட்டியலில் சேர்த்து கணக்குக்காட்டுவதும் நடக்கிறது.
பல பள்ளி நிர்வாகங்கள் அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கையை முடித்து விடுகின்றன. இதனால் ஏழை எளிய மாணவர்களின் பெற்றோர்களுக்கு விண்ணப்பங்கள் கிடைப்ப தில்லை. இதனை சீர்செய்ய அரசு நினைத்தால் முடியும். அரசாங்கம் பெற்றோர்களிடமிருந்து விண்ணப் பங்களைப் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். பின் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை பள்ளிகளிடமிருந்து பெற்று பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை கூறும் போது, “ஒரு சில பள்ளிகளை குறிப்பிட்டு புகார்கள் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன. அந்தப் பள்ளி களில் மாணவர் சேர்க்கை நடவடிக் கைகளை தடுத்து நிறுத்தியுள் ளோம். பள்ளி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையை தொடங்கக் கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். விதி களை மீறி செயல்படுவதாக தெரிய வந்தால், அந்தப் பள்ளிகளின் அங்கீகாரம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும்” என்றார்.