'கல்வி முறையில் மாற்றம் வேண்டும்': முன்னாள் ஜனாதிபதி கலாம் யோசனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியின், 50ம் ஆண்டு விழா நடந்தது. விழா கல்வெட்டை திறந்து வைத்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது: பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
சான்றிதழ்களுடன், திறன் வளர்ப்பு சான்றிதழும் வழங்க வேண்டும். தற்போதைய பாடத்திட்டத்தில், 25 சதவீதத்தை குறைத்து, தொழில், பண்பாடு, திறன், அறிவு ஆகியவற்றில், மாணவர்களை மேம்படுத்த வேண்டும். இத்தகைய திறமைகளுடன் வெளியேறும் மாணவன், புதிய தொழில் முனைவோராக தகுதி பெறலாம். தரமான அனுபவக் கல்வி, நாளைய இந்தியா வின் வளர்ச்சிக்கு உதவும். தமிழகத்திலும் கல்வி சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். தேவையற்ற படிப்புகளை தவிர்க்க வேண்டும். தன்னம்பிக்கை, பேச்சுத்திறன், தலைமை பண்பு, சுயநலம் ஒழிப்பு உள்ளிட்ட பண்புகளை மாணவர்களிடம் பெற்றோர், ஆசிரியர், அரசு இயந்திரங்கள், தன்னார்வ அமைப்புகள் எடுத்துச் செல்ல வேண்டும். கனவு தான் தன்னம்பிக்கை என்பதால், வெற்றி பெற வேண்டும் என, கனவு காணுங்கள். எண்ணம் உயர்வாக இருந்தால் மனம் எழுச்சி பெறும். இந்தியாவில் உள்ள, 60 சதவீத இளைஞர்களிடம் மன எழுச்சி வர வேண்டும். ஒரு வகுப்பில் கடைசி வரிசை மாணவர்களையும், முன்வரிசை மாணவர்கள் பெறும் மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு, கற்பிக்கும் ஆசிரியரே, சிறந்த ஆசிரியர். இவ்வாறு, அவர் பேசினார்.