மதிய உணவைப் பரிமாறும் முன் ஆசிரியர், நிர்வாகி சுவைப்பது கட்டாயம்

பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறுவதற்கு முன்னர் ஓர் ஆசிரியரும், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவரும் சுவைத்துப் பார்ப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அதோடு, மாநில அரசுகளும் மதிய உணவு மாதிரிகளை அவ்
வப்போது ஆய்வகங்கள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்துவதும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் மதிய உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மதிய உணவு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக புதிய வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிகள் கடந்த 15-10-2014 அன்று இறுதி செய்யப்பட்டது. மத்திய அரசு இவற்றை அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், மதிய உணவுத் திட்டச் செயலர்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி உள்ளது. இந்த வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்கள் தங்களுக்கான சொந்த நடைமுறைகளை வகுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதலின் படி, சமைக்கப்பட்ட மதிய உணவு 5 டிகிரி முதல் 60 டிகிரி சென்டிகிரேட் வரையிலான சூட்டில் இருக்கும்போது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் வேகமாக அவற்றில் உருவாக வாய்ப்பு உள்ளதால், உணவு சமைக்கப்பட்ட உடன் மாணவர்களுக்கு பரிமாறப்பட வேண்டும். அவ்வாறு பரிமாறும்போது குறைந்தபட்சம் 65 டிகிரி சென்டிகிரேட் சூட்டில் உணவு இருக்க வேண்டும்.
மதிய உணவை சுழற்சி முறையில் ஓர் ஆசிரியரும், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவரும் சுவைத்துப் பார்த்து சரியாக உள்ளதை உறுதி செய்த பிறகே மாணவர்களுக்குப் பரிமாற வேண்டும். அவ்வாறு தினமும் சுவைத்துப் பார்ப்பதை பதிவேடு ஒன்றில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறிப்பிட்டு வரவேண்டும்.
மாநில அரசுகளும், விஞ்ஞான தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), தேசிய ஆய்வு அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்) அல்லது இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மூலம் அவ்வப்போது மதிய உணவைப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம்.
மதிய உணவு சமைப்பவர்களும், உதவியாளர்களும் உடல் நலத்துடன் இருப்பதை உறுதி செய்ய ஆண்டுக்கு இரு முறை அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுபோல், உணவுப் பொருள்களை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும், சமைக்கும் இடத்தை சுத்தமாக வைப்பது, குழந்தைகளிடையே கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இந்த வழிகாட்டுதலில் இடம் பெற்றுள்ளது.