சர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம்

நாமக்கல்:சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, திடீரென வேறு
மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார்.விரைவில், பிளஸ் 2 பொதுத்தேர்வும், அதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்க உள்ளது. தேர்வுப் பணியை கண்காணிக்க, மாவட்ட வாரியாக, கல்வித் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களின் கண்காணிப்பாளர் பொறுப்பில், பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நியமிக்கப்பட்டார்.இந்த நியமனம், ஆசிரியர் மத்தியில் கடும் சர்ச்சையை எழுப்பியது. மேற்கண்ட இரு மாவட்டங்களில், தனியார் பள்ளிகள் அதிகம் இருக்கின்றன. நாமக்கல் மாவட்ட பள்ளிகள், மாநில அளவிலான இடங்களை பிடிக்கின்றன.
இதுபோன்ற சூழலில், குறிப்பிட்ட இரு மாவட்டங்களுக்கான பொறுப்பை, பழனிச்சாமியிடம் வழங்கியது, சர்ச்சையாக மாறியது.இந்நிலையில், நாகை, கன்னியாகுமரி மாவட்ட மேற்பார்வையாளராக பழனிச்சாமி மாற்றப்பட்டு உள்ளார். அந்த மாவட்டங்களின் மேற்பார்வையாளரான, இணை இயக்குனர் நரேஷ், நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.