தேர்வை எதிர்கொள்ளும் மாணவிகளுக்கு...

பொதுத் தேர்வுகள் நெருங்கிவிட்டன. உடலும் மனமும் சீராக இருந்தால்தான் நன்கு படித்து, தைரியமாகத் தேர்வை எதிர்கொள்ள முடியும். இது போன்ற நேரத்தில் உண்ணும் உணவு, நல்ல தூக்கம், உடல்நலக் கோளாறுகள் இல்லாமல் இருப்பது அவசியம்.

தேர்வு நெருங்கிவிட்டாலே மாணவர்களுக்கு இனம்புரியாத ஒரு படபடப்பு தொற்றிக்கொள்கிறது. ஒவ்வொருவருக்கும் பதற்றத்தின் அளவும், அது தொடர்பான விளைவுகளும் வேறுபடும். இது எல்லோருக்கும் பொதுவானதுதான். அதேநேரம் தேர்வு நேரத்தில் மாணவிகளுக்குக் கூடுதலாகச் சில சிக்கல்கள் உண்டாகலாம். வருடம் முழுக்க சிறப்பாகப் படித்தும், கடைசி நேரத்தில் ஏற்படும் சிறிய சிக்கல்களால் மதிப்பெண் இழப்பு ஏற்படும். இதை எளிதாகத் தவிர்க்கலாம்.
தேர்வு நேரத்தில் மாணவிகளுக்கு உண்டாகும் பதற்றங்களையும் அதிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் சென்னை சஞ்ஜீவனம் ஆயுர்வேத மருத்துவ மையத்தின் முதுநிலை மருத்துவ அதிகாரியான டாக்டர் எஸ்.ஆர். யாழினி பகிர்ந்துகொள்கிறார்:
தேர்வு நேரத்தில் மாணவிகளுக்கு உண்டாகும் பதற்றங்களையும் அதிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் சென்னை சஞ்ஜீவனம் ஆயுர்வேத மருத்துவ மையத்தின் முதுநிலை மருத்துவ அதிகாரியான டாக்டர் எஸ்.ஆர். யாழினி பகிர்ந்துகொள்கிறார்:
வளரிளம் பெண்களின் மனநிலை
கல்வி, தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் மூலம் தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெறுவது, அத்துடன் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை நவீனமாக மாற்றிக்கொள்வதில் மாணவிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதுபோன்ற மாற்றங்கள் நல்லவைதான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வளரிளம் பெண்களைவிட, இன்றைக்கு இருப்பவர்களிடம் புத்திசாலித்தனம் அதிகமாக உள்ளது.
அதேநேரம் அவர்களுடைய தன்னம்பிக்கை, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம், நண்பர்களுடன் பழகும் விதம், தன்னைப் பற்றிய தகவல்களை உடன் இருப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதம், தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளும் விதம் போன்றவற்றைப் பார்க்கும்போது, உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுப்பவர்களாகவும் பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடத் தயங்குபவர்களாகவும் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஏற்படும் சின்னச் சின்ன தோல்விகளை, சறுக்கல்களை எல்லா இளம் பெண்களாலும் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
தேர்வு நெருங்கும்போது
தேர்வு நெருங்கும்போது மாணவிகளின் மனநிலையில் கலவையான எண்ண ஓட்டங்கள் இருக்கும். சில மாணவிகள் தேர்வுக்கான திட்டமிடலை ஆண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு மதிப்பெண் பெறுவதில், எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. சில மாணவிகள் தேர்வுக்கு ஆறு மாதங்கள் இருக்கும் போதுதான் படிக்கவே ஆரம்பிப்பார்கள். இன்னும் சிலர், தேர்வுக்கு ஒரு மாதம் முன்பு படிக்க ஆரம்பித்தால் போதும். தேர்வில் வென்றுவிடலாம் என்னும் அதீத நம்பிக்கையில் இருப்பார்கள்.
திட்டமிடலுடன் தேர்வை எதிர்கொள்பவர்களை விட மற்றவர்களுக்குத் தேர்வு நெருங்கும் நேரத்தில் படபடப்பு, உடல் சோர்வு, மனச் சோர்வு, ஒழுங்கற்ற மாதவிலக்கு, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் படிப்பில் கவனமின்மை, ஒருமுகத்தன்மை குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
திட்டமிடலுடன் தேர்வை எதிர்கொள்பவர்களை விட மற்றவர்களுக்குத் தேர்வு நெருங்கும் நேரத்தில் படபடப்பு, உடல் சோர்வு, மனச் சோர்வு, ஒழுங்கற்ற மாதவிலக்கு, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் படிப்பில் கவனமின்மை, ஒருமுகத்தன்மை குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
சீரற்ற மாதவிலக்கு
சீரற்ற மாதவிலக்கால் மாணவிகளின் உடல், மனம் இரண்டுமே பாதிக்கப்படும். தேர்வு பயத்தால் மனதில் ஏற்படும் சிறிய பாதிப்புகள்கூட, மாதவிடாயின்போது உதிரப்போக்கில் ஆதிக்கம் செலுத்தும். சங்கிலிப் பிணைப்பைப் போல் இருக்கும் நம் உடல் உறுப்புகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும், மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப் போக்கையோ அல்லது மொத்தமாக வெளியேற முடியாத அளவுக்குத் தடங்கலையோ ஏற்படுத்தலாம்.
முறையான பயிற்சிகள்
தேர்வு பயத்தால் ஏற்படும் சீரற்ற மாதவிலக்குப் பிரச்சினைகளை சில வகையான யோகாசனங்கள் மூலம் சரிசெய்யலாம். நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சியின் மூலம் மூளையின் செயல்பாடுகள் தூண்டப்பட்டு இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். இரவில் அதிகம் கண் விழித்துப் படிப்பதால் ஏற்படும் கண் கருவளையங்களையும் உடல் சூட்டையும் சிலவகையான ஆயுர்வேத சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தலாம்.
உணவின் மூலம்
நாம் அன்றாடம் சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணாதிசயங்களை வெளிப்படுத்தும் உணவு வகைகளை உட்கொள்கிறோம். உணவு முறையை மாற்றி அமைப்பதன் மூலம் மிகப் பெரிய மாற்றங்களை நம்முடைய வாழ்வில் கொண்டுவர முடியும்.
ராஜசீக உணவுகளான இறைச்சி, அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சாத்வீக உணவான காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த தண்டு வகைகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக கேரட், ஆரஞ்சு போன்று வைட்டமின் சி, இ அதிகம் இருக்கும் காய், பழ வகைகளை அதிகம் உண்ண வேண்டும். முறைப்படுத்தப்பட்ட இந்த உணவு முறையால் ஒழுங்கற்ற மாதவிலக்கு சுழற்சி சீராகும். இதன் மூலம் மாணவிகளின் உடலும், மனமும் தெளிவாகும்.
நெய்யின் சிறப்பு
மாணவிகள் தினமும் 2, 3 ஸ்பூன் பசு நெய்யைச் சாப்பிட வேண்டும். எல்லா உணவு வகைகளும் ரத்தத்தோடு கலந்துதான் நமக்கு சக்தியைக் கொடுக்கும். நெய் மட்டும்தான் ரத்தத்தோடு கலக்காமல் நேரடியாக மூளையின் செல்களைச் சென்றடையும். இதன் மூலம் சிந்தனை கூர்மையடையும். நினைவுத் திறன் அதிகரிக்கும். முனைப்புடன் படிப்பதற்கு உதவும்.
சிகிச்சை முறைகள்
ஆயுர்வேத முறைப்படி வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் தன்மைக்கு தகுந்தபடியே ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். வாதத்தின் சமச்சீரற்ற தன்மையால் நரம்பு சம்பந்தப்பட்ட தலைவலி போன்றவை உண்டாகலாம். சமச்சீரற்ற பித்தத்தால் ஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். கபம் சீரற்று இருந்தால், தூக்கம் அதிகமாக வரும். படித்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவதில் தடை ஏற்படும்.
ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப சிகிச்சை மாறுபடும். பொதுவாக தேர்வு நேரத்தில் படித்தவுடன் மறந்துவிடுகிறது என்பவர்களுக்காக, அவர்களுடைய உடலில் சீரற்று இருக்கும் வாதம், கபத்தைச் சீராக்கி, பித்தத்தின் சக்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். கண் பிரச்சினைகளுக்கு ஆயுர்வேதப் பூச்சுகளைப் பரிந்துரைக்கலாம். இதுதவிர, உடலில் சக்தியை அதிகரிக்கச் செய்யும் புள்ளிகளில் எண்ணெய் மசாஜ் செய்வது, பாத அப்பியாங்கம் எனப்படும் சிகிச்சைகளின் மூலமும் மாணவிகளின் கற்கும் திறனை அதிகரிக்கலாம்.
ஆயுர்வேத மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று ஷீரபலா தைலம், பிரம்மித் தைலம் போன்றவற்றைத் தலைக்கு தேய்க்கப் பயன்படுத்தலாம். இன்னும் சிலருக்கு சிரோதாரா எனப்படும் இரு புருவங்களின் மத்தியில் எண்ணெய்விட்டு செய்யப்படும் மசாஜ் மூலம், உடலும் மனமும் ஒருங்கிணையும். மூக்கில் எண்ணெய் விட்டு செய்யப்படும் நஸ்யம் சிகிச்சையின் மூலம் உடலில் தேவையில்லாத கபத்தை வெளியேற்றலாம். இது போன்று பல்வேறு ஆயுர்வேத சிகிச்சைகளின் மூலம் மாணவிகள் நல்ல ஆரோக்கியத்துடன் எளிதாகத் தேர்வில் வெற்றியும் மதிப்பெண்ணும் பெறலாம்.