மாசு கட்டுப்பாட்டு சட்டம்: மாற்றம் செய்ய திட்டம்

ரத்னகிரி: ''மாசு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் விதிமுறை களில் மாற்றம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது,'' என, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரியில், 'தூய்மை இந்தியா' திட்டத்தை துவக்கி வைத்து, அவர் மேலும் பேசியதாவது:64 அரசு அதிகாரிகள், மாசு கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு பரிந்துரைகளை,
மத்திய அரசுக்கு வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில், மாசு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் விதிமுறைகளில், உரிய மாற்றங்கள் செய்வதற்கான பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது.அதிக அளவு மாசு சூழ்ந்த, 17 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, 3,000 தொழிற்சாலைகளில், கழிவு நீர் சுத்திகரிப்புக்கான, மாசுகட்டுப்பாட்டு சாதனங்கள் நிறுவப்படும். பின், இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். சுற்றுச் சூழலை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செயற்கை கோள் படங்கள் மூலம், ஆற்று மணல் எடுப்பதற்கான இடங்கள் முடிவு செய்யப்படும். ஆறுகளுக்கு பாதிப்பு உண்டாவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 40 மைக்ரான் மற்றும் அதற்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தால், அவற்றை பறிமுதல் செய்ய மாசு கட்டுப்பாட்டு துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுத்தமான காற்று, குடிநீர், எரிசக்தி மற்றும் பசுமையான சுற்றுப்புறம் என்ற நான்கு முக்கிய இலக்கு களை, மக்கள் உதவியுடன் எட்ட வேண்டும் என, அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.