நாளுக்கு நாள் அதிகரித்து
வரும் மின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லை. மின் பற்றாக்குறை காரணமாக,
குடியிருப்புகளுக்கு மீண்டும் அறிவிக்கப்படாமல், பல மணி நேரம் மின் தடை
செய்யப்படுகிறது.தமிழகத்தில் மின் தேவை, உற்பத்தியை காட்டிலும்
அதிகம் உள்ளது. இதனால், நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, 2008ல், மின்
தடை
அமல்படுத்தப்பட்டது. அதன்படி, குடியிருப்புக்கு தினமும் சுழற்சி
முறையில், சென்னையில் இரண்டு; மற்ற இடங்களில் நான்கு மணி நேரம் மின் தடை
செய்யப்பட்டது. தொழிற்சாலைக்கு, மாலை 6:00 மணி முதல், இரவு 10:00 வரை, 90
சதவீதம்; மற்ற நேரம், 40 சதவீதம் மின் தடை அமல்படுத்தப்பட்டது. வடசென்னை
விரிவாக்கம், 1,200; மேட்டூர் விரிவாக்கம், 600; வல்லூர், 1,000 என, புதிய
அனல் மின் நிலையங்களில் இருந்து, 2013 முதல், கூடுதலாக, சராசரியாக, 2,000
மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. காற்றாலைகளில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல்,
செப்டம்பர் வரை நாள்தோறும், சராசரியாக, 2,500 மெகாவாட் மின்சாரம்
கிடைத்தது.
விலக்கு:
இதையடுத்து, தமிழகத்தில் அமலில் இருந்த மின் தடை அறிவிப்பை, 2014, ஜூன்
மாதம் முதல் விலக்கி கொள்வதாக, அரசு அறிவித்தது. ஆனால், காற்றாலை மின்
உற்பத்தி குறைந்ததை அடுத்து, மீண்டும் மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், அரசு
அறிவிப்பிற்கு மாறாக, மின் தடை செய்யப்பட்டது. இதை சமாளிக்க, கடந்த செப்.,
23ம் தேதி முதல், தொழிற்சாலைக்கு மீண்டும், 20 சதவீதம் மின் தடை
அமல்படுத்தப்பட்டது. ஆனால், குடியிருப்புக்கு மின் தடை அறிவிக்கப்படவில்லை.
தற்போது, கோடை காலம் துவங்கும் முன்னரே, வெயிலின் தாக்கம் கடுமையாக
உள்ளது. மின் தேவை படிப்படியாக, அதாவது, கடந்த 18ம் தேதி, 12,120; 19ம்
தேதி, 12,370 மெகாவாட் என, அதிகரித்தது. நேற்று, மின் தேவை, 13,170
மெகாவாட்டாக உயர்ந்தது. ஆனால், மின் உற்பத்தி, 12,170 மெகாவாட்டாக
இருந்ததால், ஒரு நாளில் மட்டும், 1,000 மெகாவாட் மின் பற்றாக்குறை
ஏற்பட்டது. இதனால், மாநிலம் முழுவதும், குடியிருப்புகளுக்கு
அறிவிக்கப்படாமல் இரண்டு முதல், மூன்று மணி நேரம் வரை மின் தடை
செய்யப்பட்டது.
அபாயம்:
வரும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும்
என்பதால், மின் தேவை, 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பல மணி நேரம் மின் தடை செய்யப்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனல் மின் நிலையங்களில், திடீரென ஏற்படும் பழுதுகளால், மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை. வல்லூர், மூன்றாவது அலகு; தூத்துக்குடி என்.எல்.சி., ஆகிய புதிய அனல் மின் நிலையங்களில், இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்கப்படும் என, தெரிகிறது. இதன் மூலம், மின் தேவையை சமாளிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனல் மின் நிலையங்களில், திடீரென ஏற்படும் பழுதுகளால், மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை. வல்லூர், மூன்றாவது அலகு; தூத்துக்குடி என்.எல்.சி., ஆகிய புதிய அனல் மின் நிலையங்களில், இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்கப்படும் என, தெரிகிறது. இதன் மூலம், மின் தேவையை சமாளிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
முதல் முறை:
கடந்த ஆண்டு, ஜன., 29ம் தேதி, மின் தேவை, 12,799 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. இது, ஜூன் 24ல், 13,775 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே, அதிகபட்ச தேவையாக உள்ளது. ஆண்டுதோறும், மே, ஜூனில் தான் மின் தேவை அதிகரிக்கும் சூழலில், தற்போது முதன்முறையாக, பிப்ரவரி மாதத்தில், மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி உள்ளது.