தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளை நிரப்பக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளை நிரப்பக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த வலசை இ.ரவிச்சந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

உறுப்பினர் பதவிகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஒழுங்குமுறைச்சட்டம் 1954-ன் படி, இந்த ஆணையத்தில் ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டும். தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையத்தில் 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மீதம் உள்ள உறுப்பினர்கள் பதவிகள் நீண்ட காலமாக காலியாக உள்ளன. இதனால், அரசுப்பணிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் உறுப்பினர் பதவிக்கு கடந்த 24 ஆண்டுகளில், ஒருமுறை கூட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படவில்லை.

நிரப்பவேண்டும்

எனவே, டி.என்.பி.எஸ்.சி.யில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளை உடனடியாக நிரப்பவும், அதில் அருந்ததியர் சமூகத்தில் இருந்து ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் தமிழக தலைமை செயலர், பணியாளர் மற்றும் நிர்வாகத்துறைச் செயலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே என் மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

நோட்டீசு

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து மனுவுக்கு மார்ச் 19-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தலைமை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.