மோட்டார் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணத்தை ஒரே தடவையாக ஏன் வசூலிக்கக்கூடாது? - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சாலை வரி கட்டணத்தை வசூலிப்பதுபோல, மோட்டார் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணத்தை ஏன் ஒரே தடவையாக வசூலிக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜெகதீசன் என்பவர் விபத் துக்குள்ளாகி இழப்பீடு கோரிய வழக்கு ஒன்றில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில் ‘எங்களது நிறுவனத்தில் செய் திருந்த இன்சூரன்ஸ் கடந்த 2011 நவம்பர் 17-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. ஆனால், விபத்து 2012 ஜனவரி 30-ம் தேதிதான் நடந்துள்ளது. எனவே, இந்த இழப்பீட்டை வழங்க முடியாது என தெரிவித்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:
இவ்வழக்கில், பொன்னேரி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறேன். இந்த மனுவுக்கு ஜெகதீசன், விபத்துக்குள்ளாக்கிய லாரி உரிமையாளர் செல்வராஜ் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.
வாகனத்துக்குரிய இன்சூரன்ஸ் பாலிசியை ஆண்டுதோறும் முறையாக புதுப்பிக்கவில்லை என்றால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கு இந்த வழக்கு உதாரணமாக அமைந் துள்ளது. அமெரிக்காவை விட குறைவான வாகனங்கள் இந்தி யாவில் ஓடுகின்றன. ஆனால், அமெரிக்காவை ஒப்பிடும்போது, நம் நாட்டில்தான் அதிகமான வாகன விபத்துகள் நடைபெறுகிறது.
விபத்தில் சிக்கும் வாகனங்கள் முறையாக இன்சூரன்ஸ் புதுப்பிக்கவில்லை என ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாகின்றன. மோட்டார் வாகன சட்டத்தின்படி, இன்சூரன்ஸ் செய்யாமல், பொது இடத்தில் வாகனத்தை ஓட்ட யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், ஆண்டுக்கு ஒரு முறைதான் இன்சூரன்ஸ் பாலிசி புதுக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், பலர் பாலிசியை புதுப்பிக்காமல் இருந்து விடுகின்றனர்.
எனவே, புது வாகனங்கள் வாங்கும்போது, சாலை வரியை ஒரே தடவையாக வசூலிப்பது போல, வாகனத்துக்கும் முழு இன்சூரன்ஸ் தொகையையும் ஒரே தடவையாக வசூலித்தால், ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்க வேண்டும் என்ற பிரச்சினை ஏற்படாது.
ஒரே தடவையாக வாகன இன்சூரன்ஸ் கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்றால், இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை கேட்கவேண்டும். எனவே, இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்துக் கொண்டு, பதிலளிக்கும் படி அந்த அமைப்புக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறேன்.
மேலும் மத்திய சட்டம், கம்பெனி விவகாரம், சாலை போக்குவரத்து ஆகிய துறைகளின் செயலர்களையும், தமிழக போக்கு வரத்துத் துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரையும் எதிர்மனு தாரர்களாக இவ்வழக்கில் சேர்க் கிறேன். எதிர்மனுதாரர்களான மத்திய, மாநில அரசுகள் கீழ்க் கண்ட வினாக்களுக்கு விரிவான பதிலளிக்க வேண்டும்.
நாட்டில் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வாகனங்களின் இன்சூ ரன்ஸ் பாலிசி புதுப்பிக்கப்பட வில்லை? தற்போது சாலைகளில் ஓடும் வாகனங்களில் இன்சூரன்ஸ் பாலிசி முறையாக புதுப் பிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய போலீஸ் மற்றும் போக்குவரத்துத் துறையினரிடம் ஏதாவது வழிகள் உள்ளதா? வாகன இன்சூரன்ஸ் கட்டணத்தை, சாலை வரி கட்டணத்தை வசூலிப்பதுபோல ஒரே தடவை யாக வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது?
இவ்வழக்கை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்றை தினம் மத்திய, மாநில அரசுகளும், இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.