தமிழக அரசு வெள்ளை அறிக்கை: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

ஊட்டி: ''நிதி நெருக்கடி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையை, தமிழக அரசு வெளியிட வேண்டும்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


ஊட்டியில் அவர் கூறியதாவது:

தமிழகத்தில், 2003ல், அ.தி.மு.க., அரசு, புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியது. திட்டப்படி, அரசு ஊழியர் சம்பளத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது; மாநில அரசு, 10 சதவீத தொகையை அத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும். ஆனால், ஊழியர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது; அரசு சார்பில் பங்களிப்பு செலுத்தப்படவில்லை. புதிய பென்ஷன் திட்டப்படி, பணி ஓய்வுபெற்ற பலருக்கு, பென்ஷன் வழங்கப்படவில்லை. நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது என, அரசு கூறி வருகிறது. எந்த துறையில், எவ்வளவு நஷ்டம் என்பது குறித்து, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பல லட்சம் அரசு பணிஇடங்கள் காலியாக உள்ள நிலையில், அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், சொற்ப அளவு பணி நியமனங்கள் மட்டுமே நடந்து வருகின்றன. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை சந்திக்க முன்வரவில்லை. பேச்சு நடத்தினாலே, பெருமளவு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு, பாலசுப்ரமணியன் கூறினார்.