தேர்வுக்கு ஏற்ற உணவுகள் - டாக்டர்.கு. கணேசன்

    பிளஸ்2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது.


           பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம் அல்லாத பிற விஷயங்களில் வழிகாட்டவே இந்த பகுதி. தேர்வு தருகின்ற மன அழுத்தத்தில் மாணவர்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆகவே, தேர்வு நேரத்தில், மனஅழுத்தத்தைக்குறைப்பதற்கும், அவர்கள் நல்ல மதிப்பெண் பெற ஊக்குவிப்பதற்கும் உதவுகின்ற வகையில் உணவு முறைகளை அமைத்துக் கொள்ளவேண்டியது முக்கியம்.
 
             காலை உணவு: மூளை சீராக இயங்க அதிக ஆக்ஸிஜனும், சீரான ரத்த ஓட்டமும் அவசியம். எல்லா சத்துகளும் கொண்ட சமச்சீரான உணவு மட்டுமே மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். மூன்று வேளை சாப்பிட வேண்டும். என்ன காரணமாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலை உணவு தான் உடலுக்கு அதிக சக்தியைத் தருகிறது.தேர்வு நேரத்தில் காலையும் மதியமும் நன்றாக சாப்பிட வேண்டும். எளிதில் செரிக்கின்ற இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவை காலை உணவுக்கும் இரவு உணவுக்கும் நல்லது. தேவைப்பட்டால், சப்பாத்தி, ரொட்டி, அரிசி தோசையை மாற்று உணவாக வைத்துக் கொள்ளலாம். பூரி, புரோட்டா, நுாடுல்ஸ் வேண்டாம்.
மனஅழுத்தம் நீங்க: அரிசி சாதம்,தக்காளிசாதம், பருப்புசாதம், ரசம்சாதம், கீரை சாதம் மதிய உணவுக்கு நல்லது. புளியோதரை, லெமன் சாதம் போன்ற புளிப்புள்ள சாதவகைகளைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் இரவில் வயிறு முட்ட சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் படுக்கச் செல்லும் போது பால் சாப்பிட வேண்டும். பாலில் உள்ள 'டிரிப்டோபென்' எனும் அமினோ அமிலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கும் அற்புத மருந்து. அதுமட்டுமல்ல, மூளையில் நினைவாற்றலுக்கு உதவும் நரம்பு செல்களை உறுதியாக வைத்திருப்பதும் இதுதான்.
தயிர்அவசியம்: மதிய உணவில் தினமும் ஒருபருப்பு, ஒருகீரை, ஒருகாய், தயிர் இருக்க வேண்டும்.காரட், பீட்ரூட், அவரை, முட்டைக்கோஸ் போன்ற அடர்ந்த நிறமுள்ள காய்கறிகள் தேர்வு நேரத்தில் ஏற்றவை. மூளையை இயக்குகின்ற சத்து இவற்றிலிருந்து கிடைக்கும். வைட்டமின் ஏ நிறைந்த முருங்கைக் கீரை கண்களுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் அதிக நேரம்படிக்கும் போது கண்ணில் எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கும். தேர்வு நேரத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தத்தால் மாணவர்களுக்கு வயிற்றில் அதிகமாக அமிலம் சுரந்து அல்சர், அஜீரணம்போன்றவை தலைகாட்டும். தயிர், அமிலம் சுரப்பதைக்கட்டுப்படுத்துவதோடு, ஜீரண சக்தியை ஒழுங்குபடுத்தும்.
மாலை நேரத்தில் சுண்டல், வேகவைத்த வேர்க்கடலை, பாதாம்பருப்பு, தேனில் ஊறவைத்த பேரீட்சை, அத்திப்பழம், முளைகட்டிய பயறுகள், காய்கறிசாலட், பழ சாலட் போன்றவற்றை சாப்பிடலாம். பாதாம் பருப்பில் உள்ள "செலினியம்" நினைவாற்றலுக்கு மிக நல்லது. ஊறவைத்த பாதாமை அரைத்து சூடான பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை குடிப்பது படித்தது மறக்காமல் இருக்கஉதவும். பழம் நல்லது: தேர்வு நேரங்களில் நோய்வராமல் பாதுகாக்க வேண்டுமானால் தினமும் ஏதாவது ஒரு பழம்சாப்பிட வேண்டும். பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவுகிறது. வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, தக்காளி, பப்பாளி ஆகியவை உடனடியாக புத்துணர்வைத் தருபவை.
மாணவர்கள் துாக்கம் வராமல் இருக்க காபி, டீ அருந்துவது வழக்கம். இவற்றுக்குப்பதிலாக, இரவில் சூடானபால், லெமன் டீ, காலையில் எலுமிச்சை பழச்சாறு அல்லது காய்கறி சூப், கீரைசூப் சாப்பிடலாம். தண்ணீர் நிறையக்குடித்தால், படிக்கும் போது ஏற்படுகின்ற தலைவலியைக் குறைக்கும்.படிக்கின்ற நேரத்தில் சிப்ஸ், சீவல் போன்ற நொறுக்குத் தீனிகள் வேண்டாம். தேர்வு முடியும் வரை கொழுப்பு மிகுந்த அசைவ உணவுகள் வேண்டாம். முடியாத பட்சத்தில் மீன், முட்டை சாப்பிடலாம். அதுவும் இரவில் நிச்சயம் வேண்டாம். கொழுப்பு உணவு மூளையை மழுங்கடித்து துாக்கத்தை வரவழைக்கும்.
-டாக்டர்.கு. கணேசன், பொதுநல மருத்துவர், ராஜபாளையம். 99524 34190