பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களில் "ஸ்கெட்ச்', வண்ண
பென்சில்களால் எழுதக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாணவர்களுக்கு
அறிவுறுத்தியுள்ளது.
பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் செய்யக்கூடியவை,
செய்யக்கூடாதவை தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் செவ்வாய்க்கிழமை
அறிவிப்பு வெளியிட்டது.
அதன் விவரம்: விடைத்தாள் முகப்புச் சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள்
கையொப்பமிட வேண்டும். விடைத்தாளில் ஒரு பக்கத்துக்கு 20 முதல் 25 வரிகள்
வரை எழுத வேண்டும். விடைத்தாளின் இருபுறத்திலும் எழுத வேண்டும்.
விடைகள் தொடர்பான அனைத்துக் கணக்கீடுகளும் விடைத்தாள் பக்கத்தின்
கீழ்ப்பகுதியில் இடம்பெற வேண்டும். வினா எண்ணை தவறாமல் எழுத வேண்டும்.
விடைத்தாளில் நீலம், கருப்புமை கொண்ட பேனாவால் விடைகளைத் தெளிவாக எழுத
வேண்டும். விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்குக்கோடு இட வேண்டும்.
மாணவர்கள் செய்யக் கூடாதவை: வினாத்தாளில் எந்தவிதக் குறியீடும் இடக்கூடாது.
விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது. விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும்
தேர்வு எண், பெயரை எழுதக் கூடாது. "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களைப்
பயன்படுத்தி எழுதக் கூடாது. விடைத்தாள் புத்தகத்தின் எந்தத் தாளையும்
கிழிக்கவோ, நீக்கவோ கூடாது ஆகிய அறிவுரைகள் மாணவர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளன.