பொதுத்தேர்வு விதியில் நீலகிரிக்கு விலக்கு? மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பு

'நீலகிரியில் பனிக்காலம் நீடிக்கும் என்பதால், பொதுத்தேர்வு அறைகளில், மாணவ, மாணவியர் காலணிகளை கழட்டி விட்டுச் செல்ல வேண்டும்' என்ற உத்தரவில் இருந்து, நீலகிரிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

           தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், 'பிட்' அடிப்பதை தவிர்க்க, தேர்வு அறைக்குள் செருப்பு, ஷூ அணிந்து செல்லக் கூடாது, என கடந்தாண்டு, அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டது.ஆனால், 'குளிர் பிரதேசமான நீலகிரியில், சிமென்ட் மற்றும் கான்கிரீட் தரைகளில், குளிர் தன்மை அதிகளவில் இருக்கும் என்பதால், காலணிகளை அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும்' என, பெற்றோர், மாணவ, மாணவியர் மற்றும் பொதுநல அமைப்பினர் கடந்த ஆண்டு வலியுறுத்தினர். அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவி சாய்க்கவில்லை.

பயமுறுத்தும் பனிக்காலம் : நடப்பாண்டிற்கான, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச், 5ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச், 19ம் தேதியும் துவங்க உள்ளன.நீலகிரி மாவட்டத்தில், நவம்பர் மாதம் துவங்கும் பனிக்காலம், பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை நீடிப்பது வழக்கம். இந்தாண்டு, 'மார்ச் மாதம் வரை பனி நீடிக்கும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

நீலகிரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நீலகிரியில், கடந்த சில ஆண்டுகளாக, மாணவர்கள் 'காப்பி' அடித்து சிக்கி கொள்ளும் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனவே, பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மாணவர்கள் காலணி அணிந்து தேர்வு எழுத அனுமதி அளிக்கலாம்' என, தேர்வுகள் இயக்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம்' என்றனர்.

பெற்றோர் தரப்பில் கூறுகையில், 'வகுப்பறைகளில், மூன்று மணி நேரம் வெறுங்கால்களை தரையில் வைத்து, தேர்வெழுதுவதால், சளி, காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. குளிரில் நடுங்கும் கால்களுடன் முழு கவனத்துடன் தேர்வு எழுத முடியாது. எனவே, நீலகிரி மாவட்ட மாணவர்கள் காலணி அணிந்து, தேர்வு எழுத அரசு அனுமதிக்க வேண்டும்' என்றனர்.