கப்பல் துறை கல்வி பயின்ற மாணவர்கள் பயிற்சிபெறுவதற்காக நிதியுதவி அளிக்க அரசு முடிவு

கப்பல் துறை தொடர்பான கல்வி பயின்ற மாணவர்களுக்கு, வேலையில் சேருவதற்கான பயிற்சி பெறுவதற்காக, நிதி உதவி அளிக்க, மத்திய நிதி அமைச்சகம் சம்மதித்துள்ளது.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறி
யதாவது: சரக்கு கப்பலில் பணியாற்றுவதற்கு, பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்கள், நாட்டின் பல இடங்களில் செயல்படுகின்றன. இங்கு பயிற்சி முடித்து தேர்வு பெறும் மாணவர்கள், பணியில் சேருவதற்கு முன், கப்பல்களில் களப் பணி குறித்த பயிற்சியை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்த பயிற்சியை அளிப்பதற்கு, சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள், அதிக கட்டணம் வசூலிக்கின்றன. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளதால், கட்டணத்தை அதிகமாக வசூலிக்க வேண்டியுள்ளதாக, கப்பல் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஷயத்தை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. இதையடுத்து, இந்த பயிற்சியை பெறுவதற்கு, மாணவர்களுக்கு உதவும் வகையில், மூன்று லட்சம் ரூபாய் மானியம் அளிக்க, மத்திய நிதி அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளது. பயிற்சிக்கு தேவையான மீதமுள்ள பணத்தை, வங்கிகளில் இருந்து, கல்விக் கடன் மூலம் பெறலாம். இந்த வங்கிக் கடனை, மாணவர்கள் எளிதாக பெறலாம்.
மத்திய அரசின் இந்த திட்டத்தால், 2010 - 12 காலத்தில், நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பயிற்சி முடித்த, 4,000 மாணவர்கள் பயன் பெறுவர். மத்திய அரசின் மானியம், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். முறையான கப்பல் போக்குவரத்து சங்கங்களில், பதிவு செய்யப்பட்ட கப்பல் நிறுவனங்களுக்கு மட்டுமே, மானியம் அளிக்கப்படும். இவ்வாறு, அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.