தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில்அச்சடிக்கப்பட்ட பாட புத்தகங்களில் பிழைகளை திருத்துவது எப்படி?

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் பிழைகளை எப்படி திருத்துவது என்று அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

விலை இல்லா பாடப்புத்தகங்கள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், பாடப்புத்தகங்கள் கொடுக்கப்படுகின்றன.

பாடப்புத்தக பைண்டிங் பிரிந்து போகாமல் இருக்க, 1-வது வகுப்பு முதல் 9-வது வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு 3 பருவங்களாக பாடப்புத்தகங்கள் பிரித்து அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

11-வது மற்றும் 12-வது வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடப்புத்தகங்கள் தொகுதி-1, தொகுதி-2 என்று அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. பள்ளிக்கூட நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள், காலணிகள் உள்பட 14 வகையான விலை இல்லா பொருட்களை மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.

பிழைகள்

இந்தநிலையில் 9-வது மற்றும் 10-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகத்தில் நிறைய பிழைகள் உள்ளன. குறிப்பாக சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஏராளமான பிழைகள் இருப்பது தெரியவந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பிழைகளை நிவர்த்தி செய்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகம் சார்பில் (தமிழ்நாடு பாடநூல் கழகம்) பாடப்புத்தகம் புதிதாக அச்சடிக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு 2015-2016-ம் கல்வி ஆண்டில் வழங்க முடியுமா? என்று கேட்டதற்கு அதிகாரிகள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முழுவதும் 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு வழங்க பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன.

அதிகாரிகள் குழப்பம்

மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் அன்றே விலை இல்லா பாடப்புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன.

இதையொட்டி 50 சதவீத பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விட்டன. மேலும் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஓரளவுக்கு தெரிந்த பிழையை மட்டும் திருத்தி அச்சடிக்கப்பட்டு உள்ளன. 100 சதவீத பிழை இன்றி அச்சடிக்கப்படுவது சிரமம்தான். அடுத்த வருடம் 2-வது பருவத்திற்கு உரிய பாடப்புத்தகங்கள் பிழை இன்றி அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏராளமான பிழைகள் கொண்ட பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுவிட்டதால் இந்த பாடப்புத்தகங்களில் உள்ள பிழைகளை திருத்த என்ன செய்யப்போகிறோம் என்று அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.