பிளஸ் ௨ தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம் அல்லாத பிற விஷயங்களில் வழிகாட்டவே இந்த பகுதி.
"தேர்வுகளை எவ்வாறு திட்டமிட்டு எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்" என மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் துரைபாஸ்கரன் தரும் 'டிப்ஸ்'கள் இங்கே...
முதலில் பதட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். உடல், மன நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தேர்வு காலம் முடியும் வரை மனதை லேசாக வைத்திருக்க பழக வேண்டும்.
எந்த பாடத்தை படித்தாலும் அதற்குமுன் ஐந்து நிமிடங்கள் தியானம் செய்து மனதை ஒருநிலைப்படுத்திய பின் படிக்கலாம். தூக்கம் பாதிக்கும் வகையில் அதிக நேரம் கண் விழிக்க கூடாது. தேர்வு முடியும் வரை வீண் விவாதங்கள், அரட்டைகளை தவிர்க்க வேண்டும். வீடுகளில் 'டிவி' கேபிள் இணைப்பை தேர்வு வரை 'கட்' செய்வது சிறந்தது. நேரத்தை கபளீகரம் செய்யும் மொபைல் போன், கம்ப்யூட்டர் கேம்ஸ்கள் பக்கம் தலைவைத்து படுக்கக்கூடாது. டூவீலர் ஓட்டும் ஆசையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.'தியரி' கேள்விகளை அதிகாலை, மாலையில் படிப்பது நல்லது. கணக்கு பாடத்தை இரவில் செய்து பார்க்கலாம். அறிவியலில் படம் வரையும் கேள்விகளுக்குரிய படங்களை அடிக்கடி வரைந்து பார்த்தால் முழுமதிப்பெண் பெற வழியுள்ளது.கடின பகுதிகளை அடிக்கடி எழுதி பார்ப்பது, குறிப்புகள் எடுத்து படிக்கும் பழக்கத்தால் பாடங்கள் மனதில் நிற்கும். பாடங்களை படிக்கும்போது தூய்மையான காற்றோட்டம் உள்ள இடங்களில் அமர்ந்து படித்தால் சோர்வு ஏற்படாது.விரைவில் செரிமானமாகும் அளவான சாப்பாடு மாணவர்களுக்கு அவசியம். பசி உணர்வுடன் படிப்பதை தவிர்க்க வேண்டும். பாடத்தின் முக்கிய பகுதிகளை நண்பர்களுடன் அடிக்கடி விவாதிக்கலாம்.விரும்பிப் படிக்கும் எந்த பாடங்களும் கடினமில்லை. விடா முயற்சியும், பயிற்சியும் இருந்தால் அதிக மதிப்பெண் பெற்று சாதிக்கலாம்.