பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது.

தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து, ஆண்டுதோறும் பெற்றோ
ருக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆய்வகம், விளையாட்டு மைதானம், நூலகம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலேயே, பல இடங்களில் பள்ளிகள் துவக்கப்பட்டன. புற்றீசல் போல் ஏராளமான பிரைமரி, நர்சரி பள்ளிகள் அதிகரித்தன. 2004ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பின், நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளின் மீது, அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. மெட்ரிக் பள்ளிகளில் போதுமான காற்றோட்டம், இடவசதி உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே அங்கீகாரம் தரவேண்டும்; பிரைமரி, நர்சரி பள்ளிகளில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கீகாரத்தைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் மொத்தம் 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. குறைந்தது நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, மொத்தம் 15 (ஐ.எம்.எஸ்.,) மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் தனியார் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் இதர விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

பள்ளிகளின் அங்கீகாரம், பிற விவரங்களை அறிய, பெற்றோருக்கு எவ்வித வசதியும் இல்லை. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்து, பரிதவிக்கும் பெற்றோர் அதிகம். இக்குறையைப் போக்க, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை துவக்கியுள்ளது. இதற்காக, பள்ளிகளுக்கு தனித்தனியே வரிசை எண் வழங்கப்பட உள்ளது.

ஈரோடு மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள் முருகன் கூறுகையில், “”பள்ளிகள் சார்பான புள்ளி விவரங்களை, tnmatric.com என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ள பள்ளிக்கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பள்ளி குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்படுகிறது. புதிய பள்ளிகள் அங்கீகாரம் பெற ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்,” என்றார்.