இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 7 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

சென்னை : சென்னையில், இன்று துவங்க உள்ள இரண்டாவது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில், ஏழு லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.


1,502 மையங்கள் : ஆண்டிற்கு இருமுறை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 18ம் தேதி முதல் கட்டமாக நடந்த, போலியோ சொட்டு மருந்து முகாமில், சென்னையில், 7.15 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாவது கட்ட சொட்டு மருந்து முகாம், இன்று நடைபெற உள்ளது.அதற்கான, அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மாநகராட்சி செய்துள்ளது. சென்னை நகரில், ஐந்து வயதிற்குட்பட்ட 6.64 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு மருந்து கொடுப்பதற்காக, நகர் முழுவதும் 1,502 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவ மனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில், பேருந்து நிலையங்கள், மெரீனா கடற்கரை, பொருட்காட்சி, கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் சொட்டு மருந்து முகாம் நடைபெறும். சென்னையில், பணி நிமித்தமாக வரும் வெளியூரைச் சேர்ந்தவர்களும், தங்கள் குழந்தைகளுக்கு அவசியம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். முகாம் காலை7:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நடக்கும். அரசு பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என, 7,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அவசியம் : இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மாதம் நடந்த, முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில், மருந்து போட்டு கொண்டவர்கள் கூட, இன்று நடைபெறும் முகாமில் மருந்து போட்டு கொள்ள வேண்டும். இது குழந்தைகளின் ஜீரண உறுப்பில் இருந்து, போலியோ கிருமிகளை அழிக்கும். நம் நாட்டில் போலியோ இல்லாவிட்டாலும், அண்டை நாடுகள் மூலம் பரவி விடக் கூடாது என்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.