தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள்
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 4 ஆண்டுகளில் 182
புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல் 1,317 நடுநிலை, உயர்
நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல்
அளிக்கப்பட்டு 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் இதுவரை
பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இடைநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், இடையில் நிற்றலைக் குறைப்பதற்காக
சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், நான்கு சீருடைத்
தொகுப்புகள், மிதிவண்டிகள் போன்றவற்றுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8
ஆயிரத்து 749 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
நான்கு ஆண்டுகளில் 53 கல்லூரிகள்: கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய
பகுதிகளில் வாழும் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக தமிழக அரசின் சார்பில்
கடந்த 4 ஆண்டுகளில் 38 கலை அறிவியல் கல்லூரிகள், 11 பலதொழில்நுட்பவியல்
கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய பாடப் பிரிவுகள்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 ஆயிரத்து 204 மாணவர்கள் பயன்
பெற்றுள்ளனர். உயர்கல்வி சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 21 சதவீதமாகவும்,
தமிழகத்தில் 42 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது என ஆளுநர் உரையில்
கூறப்பட்டுள்ளது.