6–வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் சங்க மனுவை 4 மாதத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை
6–வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் கொடுத்த மனுவை 4 மாதத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
வித்தியாசம் தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு இடையே சம்பளம் தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசு பள்ளிகளின் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.9,300, தரச்சம்பளம் ரூ.4,200 என்று நிர்ணயம் செய்துள்ளது.
3 நபர் கமிஷன் இதையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசு 3 நபர் கமிஷன் அமைத்தது. இந்த 3 நபர் கமிஷன், 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனால், இந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பளத்தை மாற்றி அமைக்காமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. எனவே, 3 நபர் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்குள் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பரிசீலிக்க வேண்டும் இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 6–வது சம்பள கமிஷன் பரிந்துரை, 3 நபர் கமிஷனின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்து வழங்கக்கோரி மனுதாரர் கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் 10–ந்தேதி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார். எனவே, அவரது கோரிக்கை மனுவை தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 மாதத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.