தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி

மத்திய அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னையைச் சேர்ந்த டெக் விஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வியை 201
5-16-ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின்னர் டெக் விஸார்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பால் வின்ஸ்டன் கூறியதாவது:

வளர்ந்து வரும் ரோபாடிக்ஸ் துறையில் இந்திய இளைஞர்களும் சிறந்த விளங்கும் வகையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி வரும் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதற்கான பாடத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 தலைப்புகள் வீதம் 6 ஆண்டுகள் படிக்கக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஏற்றதாக இது இருக்கும்.

இந்தப் பயிற்சியில் முதல் 4 ஆண்டுகள் முடிவில் இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இளநிலை டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், 6 ஆண்டுகள் முடிவில் பயிற்சியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதுநிலை டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்காக திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிக்கும் ஊக்கம் அளிக்கப்படும்.

இந்தத் திட்டம் மாணவர்களிடையே தொழில்நுட்ப அறிவைத் தூண்டுவதோடு, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடுவதாக அமையும் என்றார்.