இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் 4 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்

3 நபர் கமிஷன் பரிந்துரைப்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் 4 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்
இடை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிப்பது குறித்து 4 வாரத்துக்குள் பரிசீலித்து பதில் அளிக்க வேண்டும் அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட் என்பவர்
தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 1999ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பள தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.இந்த நிலையில், மத்திய அரசு 6வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசுபள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ9,300, தரச்சம்பளம் ரூ.4,200 என்று நிர்ணயம் செய்துள்ளது.
இதையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசு 3 நபர் கமிஷன் அமைத்தது. இந்த 3 நபர் கமிஷன், 6வது சம்பள கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், இந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பளத்தை மாற்றி அமைக்காமல் தமிழக அரசுமவுனம் காத்து வருகிறது. எனவே, 3 நபர் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சஞ்சய் காந்தி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சி.செல்வராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது 6வது சம்பள கமிஷன்பரிந்துரை, அதனடிப்படையில் அமைக்கப்பட்ட 3 நபர் கமிஷன் அறிக்கை அடிப்படையில், தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.