திருவண்ணாமலை அருகே மாணவியின் தலைமுடியை வெட்டியதாக 2 பள்ளி ஆசிரியைகள் பணிநீக்கம்

திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவியின் தலைமுடியை வெட்டியதாக 2 ஆசிரியைகளை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

9-ம் வகுப்பு மாணவி

திருவண்ணாமலை அருகே உள்ள கருத்துவாம்பாடியை சேர்ந்தவர் பிரேம்நாத். இவருடைய மகள் ஸ்ரீநிதி (வயது 14). இவர் திருவண்ணாமலை அருகே உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஸ்ரீநிதி நெற்றியின் முன்பக்கம் சிறிது கூந்தலை விட்டு, அதில் கிளிப் மாட்டி பள்ளிக்கு வந்துள்ளார். இதை கண்ட அவரது வகுப்பு ஆசிரியை, ஸ்ரீநிதியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பக்கம் உள்ள முடியை வெட்டி விட்டு வகுப்பறைக்கு வருமாறு கூறி உள்ளார். ஆனால் ஸ்ரீநிதி முடியை வெட்டாமல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

முடியை வெட்டினர்

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி வகுப்பறையில் இருந்த ஸ்ரீநிதியின் தலையின் முன்பக்கத்தில் உள்ள முடியை வகுப்பு ஆசிரியைகள் 2 பேர் சக மாணவ-மாணவிகளின் மத்தியில் கத்திரியால் வெட்டியதாக கூறப்படுகிறது.

சக மாணவ-மாணவிகள் மத்தியில் முடியை வெட்டியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீநிதி பள்ளியில் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அப்போது அவரது தந்தை பிரேம்நாத் காலையில் பள்ளிக்கு சென்று வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்பதாக கூறி ஸ்ரீநிதியை சமாதானப்படுத்தி உள்ளார்.

தற்கொலை முயற்சி

எனினும் சமாதானம் அடையாத ஸ்ரீநிதி இரவு தூங்கும் போது விஷத்தை (எலி மருந்து) சாப்பிட்டு உள்ளார். அதி காலையில் பார்த்த போது ஸ்ரீநிதி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் ஸ்ரீநிதியிடம் விசாரணை நடத்தினர். ஸ்ரீநிதி அளித்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியைகள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இது தொடர்பாக மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் முருகேசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் கேட்டறிந்தார். அதே போல் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார்.

2 ஆசிரியைகள் பணி நீக்கம்

இந்த சம்பவம் குறித்து மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் முருகேசன் கூறியதாவது:-

பள்ளி மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக மாணவி, அவரது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினேன். இது தொடர்பான அறிக்கையை மெட்ரிக் பள்ளி இயக்குனருக்கு அனுப்பி உள்ளேன்.

மாணவியின் தற்கொலை முயற்சி காரணமாக சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் 2 பேரையும் பணி நீக்கம் செய்திருப்பதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கையை மெட்ரிக் பள்ளி இயக்குனர் எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.