ஆசிரியர் இல்லாமல் பிளஸ் 2 தேர்வு : அரசுப்பள்ளியில் தொடரும் அவலம்

சிங்கம்புணரி:இந்த கல்வி ஆண்டு முழுவதும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் எஸ்.புதுார் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2,பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாராப்பூர், நெடுவயல், கே.புதுப்பட்டி,கிழவயல்,சுற்றுக் கிராமங்களைச் 500 க்கும்மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த ஆண்டு 65 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவிருக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த நடப்பு கல்வி ஆண்டு துவக்கத்திலிருந்து ஆங்கிலம், கணிதத்திற்கு ஆசிரியர்களே இல்லை. மற்ற வகுப்பு ஆசிரியர்கள் இவர்களுக்கு பாடம் நடத்தி பொதுத்தேர்விற்கு தயார் படுத்தி வருகின்றனர். முற்றிலும் கிராமப்பகுதி மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
ஆசிரியர் இன்றி பொது தேர்வு எழுதும் தங்கள் குழந்தைகள் எதிர்காலம் பற்றி பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

தலைமை ஆசிரியர் சங்கரலிங்கத்திடம் கேட்டபோது, ஆசிரியர்கள் காலியிடம் பற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன், என்றார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் தெரிவித்ததாவது: மலைக்கிராமமாக இருப்பதால் ஆசிரியர்கள் யாரும் பணி செய்ய தயங்குகின்றனர் . எனினும் மாணவர்கள் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.