பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஷூ பெல்ட் அணிய கூடாது: தேர்வு துறை ஆலோசனை

  பிளஸ் 2 வகுப்பு தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மாணவ, மாணவிகள் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வர தடைவிதிப்பது குறித்து தேர்வு துறை  பரிசீலனை செய்து வருகிறது.

 
           பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் புதுச்சேரியில் 5,600  பள்ளிகளை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் இத் தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு விடைத்தாளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்  பக்கத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்களையோ, பாடங்களையோ எழுத வேண்டியதில்லை. அனைத்தும் விடைத்தாளில் அச்சிட்டே வழங்கப்படுகிறது.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை மட்டும் முதல் பக்கத்தில் பதிவு செய்தால் போதும். 

மேலும், விடைத்தாள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்துக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படு கிறது. கேள்வித்தாளில் இடம் பெறும் பயிற்சிக்கான  படங்கள், விடைத்தாளில் இணைக்கப்பட்டே வழங்கப்பட உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு நேரத்தில் கடை பிடிக்க வேண்டியவை குறித்து  விடைத்தாளின் இரண்டாம் பக்கத்தில் அச்சிடப்பட்டுள் ளது. அதன்படி மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது.  தேர்வு எழுதும்  மாணவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு அறையில் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வருவதை தடை செய்யவும் தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. கடந்த  ஆண்டு ஷூ, பெல்ட், டை அணிந்து வர அனுமதிக்கப்பட்டனர். 

ஆனால் இந்த ஆண்டு ஷூவை  தேர்வு அறைக்கு வெளியில் கழற்றி வைத்து விட்டுத்தான் வர வேண்டும் என்று அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. அறிவியல்,  கணக்கு, வணிக கணிதம், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளில் முக்கிய விடைகள் மற்றும் வரைபடங்களை ஸ்கெட்ச்  பேனா, கலர் பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தி போடுவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு அவற்றுக்கும் தடை வருகிறது. விடைத்தாளில் எழுதப்படும் விடைகளின் கீழ் அடிக்கோடு இடக்கூடாது. குறிப்பாக ஸ்கெட்ச் பேனா, கலர்  பென்சில் ஆகியவற்றால் அடிக்கோடு இடுவது, சிவப்பு மையால் அடிக்கோடு இடுவது ஆகியவற்றுக்கும் தடை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. விடைத்தாளில்  மொத்தமாக ஒதுக்கப்பட்ட பக்கங்களுக்கு உள்ளாகவே விடைகளை எழுத வேண்டும்.