அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக 202 சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்


சென்னை,
அரசு பள்ளிகளில் படிக்கும் பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ–மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க 202 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

சிறப்பு ஆசிரியர்கள் 202 பேர் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் சாதாரண மாணவ–மாணவிகள் மத்தியில் பார்வையற்ற, காதுகேளாத மாணவ–மாணவிகளும் சேர்கிறார்கள். எல்லா மாணவர்களுக்கும் ஒரே விதமாக கல்வி கற்பித்தால் பார்வையற்ற மாணவர்களுக்கும், காதுகேளாத மாணவர்களுக்கும் படிப்பது சிரமம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சில அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ–மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க சிறப்பு ஆசிரியர்கள் நிரந்தரம் இன்றி பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய ஆசிரியர்கள் 202 பேர்களை எழுத்துத்தேர்வு நடத்தி ஆசிரியர் தேர்வு வாரியம் நியமிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக அரசு ஆணை பள்ளிக்கல்வித்துறை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–
ஆதார மையம் மாற்றுத்திறன் கொண்ட அனைத்து குழந்தைகளுக்காகவும் பெற்றோர்களுக்காகவும் நாட்டிலேயே முதல் முதலாக மாநில ஆதார மையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கான உள்ளடங்கிய இடை நிலை கல்வி திட்டத்தின் கீழ் தரமான கல்வி வழங்கும் பொருட்டு ரூ.5 கோடியே 35 லட்சம் செலவில் 202 சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இந்த 202 ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த தேர்வை சிறப்பு பி.எட். படித்த பட்டதாரிகள் எழுதுவார்கள்.
இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வை ஏற்கனவே சிறப்பு ஆசிரியர்களாக நிரந்தரம்இன்றி பணியாற்றுபவர்களும் எழுதலாம்.
விரைவில் அறிவிப்பு இதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் வரும். சம்பளச்செலவை இடைநிலை கல்வி திட்டம் ஏற்க உள்ளது.