வட மாநிலங்களில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சல்: அதிக அளவாக ராஜஸ்தானில் 165 பேர் பலி

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை ஐநூறை நெருங்கிவிட்டது. இதில், மிக அதிக அளவாக ராஜஸ்தானில் 165 பேர் பலியாகி உள்ளனர். இங்கு கடந்த ஆண்டு பரவிய பன்றிக் காய்ச்சலால் 34 பேர் பலியாயினர்.

இந்த மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத்தில் 153
குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலால் 1,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 153 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, ‘டாமி ப்ளூ’ மாத்திரைகளை தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும் விநியோகிக்க குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 44
மத்தியப் பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 44 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நானூறை தாண்டி உள்ளது.
உ.பி.யில் பாதிப்பு
உபியில் பன்றிக் காய்ச்சலால் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் லக்னோ மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று பேர் இறந்துள்ளனர். அலகாபாத், கான்பூர், ஹர்தோய், பஹைரைச், சஹரான்பூர் சீத்தாபூர், அலிகர் ஆகிய நகரங்களில் தலா ஒருவரும் டெல்லியை ஒட்டி உள்ள காஜியாபாத், ஆக்ரா மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் தலா இரண்டு பேரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே, இந்த நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அம்மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் சிங் யாதவ் அரசு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அலிகர் பல்கலைக்கு விடுமுறை
ஆக்ரா அருகே உள்ள அலிகரில் சுற்றுலா சென்று வந்த ஒரு மாணவி பன்றிக் காய்ச்சலால் பலியாகி உள்ளார். இவருடன் சுற்றுலா சென்று திரும்பிய அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் அப்துல்லா மகளிர் கல்லூரி மாணவிகளில் ஐந்து பேருக்கு பன்றி காய்ச்சலுக்குக் காரணமான ‘ஹெச்1 என்1’ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அந்தக் கல்லூரியில் வரும் 25-ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறாது என்றும் விடுதி இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவதி
வட மாநில சுற்றுலா தலங்கள் பன்றிக் காய்ச்சலால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து தப்பிப்பதற்காக, மக்கள் முக கவசம் அணிந்து செல்வதைப் பரவலாக காண முடிகிறது. இதன் காரணமாக பன்றிக் காய்ச்சலுக்கான முகக்கவசத்தின் விலை ரூ.300 வரை அதிகரித்துள்ளது.
மேலும் தனியார் மையங்களில் ஹெச்1 என்1 வைரஸ் பரிசோதனைக்கான கட்டணமாக ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வசதி பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.