இடைத்தேர்தலை முன்னிட்டு ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 13-ந் தேதி பொது விடுமுறை

இடைத்தேர்தலை முன்னிட்டு ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 13-ந் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்குள் வருகின்றன. அந்த தொகுதிக்கு 13-ந்
தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
எனவே தேர்தல் நடக்கும் அந்த நாளில் மட்டும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 13-ந் தேதியன்று அங்குள்ள மக்கள் அனைவரும் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக, அந்த தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட வேண்டும். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் யாரும் திருச்சி அல்லது புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றினால், வாக்களிக்க வசதியாக அவர்களுக்கும் பிப்ரவரி 13-ந் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.