நடப்பு கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பாலிடெக்னிக்குகளில் மாணவர்களுக்கு ரூ.1100 கோடி செலவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்

நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் ரூ.1100 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது.

ஆலோசனை கூட்டம்

தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் மூலம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், தகவல் தொழில் நுட்ப செயலாளர் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர் (பொறுப்பு), தா.கி. ராமச்சந்திரன், அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் பிரவீண் குமார், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அதுல் ஆனந்த், பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

ஏற்கனவே 2011-12 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்ற 8.67 லட்சம் மாணவ மாணவிகளுக்கும், 2012-13 ஆம் ஆண்டில் 7.18 லட்சம் மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.மேலும் 2013-14-ம் ஆண்டு 5 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 21 லட்சத்து 15 ஆயிரம் மடிக்கணினிகள் மாணவ மாணவிகள் பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்காக இதுவரை 2,781 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1100 கோடிக்கு மடிக்கணினி

தமிழக அரசு இவ்வாண்டு (2014-15), 5 லட்சத்து 50 ஆயிரம் மடிக்கணினிகளும், 2015-16 ஆம் ஆண்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் மடிக்கணினிகளும் என ஆக மொத்தம் 11 லட்சம் மடிக்கணினிகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளது. 2014-15-ம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக ரூ.1100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, இவ்வாண்டு (2014-15), 5 லட்சத்து 50 ஆயிரம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்யும் பணி தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகள் அவர்களுக்கு உயர்கல்வி படிக்கும்போது நன்றாக பயன்படுகிறது.

இந்த தகவல் அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.