1,078 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்கிறது அரசு

தமிழக போலீசில், 1,078 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழக போலீசில், 20,௭16 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், சட்டம்- - ஒழுங்கு பிரிவில், முதற்கட்டமாக, 1,078 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


அதன் விவரம்:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால், போலீஸ் சார்பு ஆய்வாளர் (தாலுகா) எஸ்.ஐ., பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், 1,078 பணியிடங்களில், 984 பேர், நேரடி தேர்வு வழியாகவும், 94 பேர், காவல் துறையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் மூலமும் நிரப்பப்பட உள்ளனர்; இவற்றுக்கு, தனித்தனியே எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது.காவல் துறை சார்ந்தவர்கள், பொது ஒதுக்கீட்டிற்கான வயது, பிற தகுதிகள் பெற்றிருப்பின், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்.

பொதுப்பிரிவினர், 2015 ஜூலை 1ம் தேதி, 20 வயது நிறைவு பெற்றும், 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவ படையினர், பணியிலிருந்து விடுபட்டு, மூன்று ஆண்டுகளுக்குள் இருந்தால் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு, ௪௫. வின்ணப்பிப்போர், பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றோர், விண்ணப்பிக்க இயலாது. www.tnusrbexams.net இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை, மார்ச் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுகள், பொது ஒதுக்கீட்டுக்கு, மே 23ம் தேதியும், காவல் துறை ஒதுக்கீட்டுக்கு, மே 24ம் தேதியும் நடத்தப்படும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.