1,078 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு அறிவிப்பை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட 2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை

தமிழக காவல் துறையில் புதிதாக 1,078 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை முன்கூட்டியே வாட்ஸ் அப்பில் வெளியிட்ட 2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு

தமிழக போலீசில் புதிதாக 1,078 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. 1,078 பேரில் 94 பேர் காவல்துறையைச்சார்ந்த களப்பணியாளர்கள் மற்றும் அமைச்சுபணியாளர்களின் பெண்வாரிசுகளைக்கொண்டு, தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பும் பணி தொடங்கிவிட்டது. இணையதளம் மூலம் விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் 10-3-2015 ஆகும்.

எழுத்து தேர்வு முதலில் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடக்கும். அதிலும் ஜெயிப்பவர்கள் இறுதியாக நேர்முகதேர்வை சந்திக்க வேண்டும். எழுத்து தேர்வு, பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 23-5-2015 அன்று நடக்கும். காவல்துறைக்கான ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 24-5-2015 அன்று எழுத்து தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் மூலம் வெளியீடு

சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு பற்றிய அறிவிப்பை, அரசு விளம்பரமாக வெளியிடும் முன்பே, வாட்ஸ் அப் மூலம் தகவலை வெளியிட்டுவிட்டனர். இது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணய அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது.

சீருடைபணியாளர் தேர்வாணய அலுவலகத்தில் வேலை பார்க்கும் 2 போலீஸ்காரர்கள்தான் வாட்ஸ்அப் மூலம் இந்த தகவலை பரப்பினார்கள் என்று கண்டுபிடித்துவிட்டனர். அந்த போலீஸ்காரர்களில் ஒருவர் ஆயுதப்படை பிரிவைச்சேர்ந்தவர். மற்றொருவர் சிறப்பு காவல்படை பிரிவில் உள்ளவர்.

ஒழுங்கு நடவடிக்கை

இந்த 2 போலீஸ்காரர்களும் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது அதிரடி விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்தவுடன், அவர்கள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ஏற்பாடுகளை சீருடைப்பணியாளர் தேர்வாணய கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார்சிங், ஐ.ஜி. வினித்வான்கடே, சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி ஆகியோர் செய்து வருகிறார்கள்.