TNPSC Annual Planner - இன்று வெளியீடு

   குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிடுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஓராண்டுக்கு உரிய ஆண்டு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. 
 
           அதில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறவிருக்கும் தேர்வுக்குரிய விவரங்கள் யாவும் இடம்பெற்றிருக்கும். அதன்படி, 2015-16ம் ஆண்டிற்கான ஓராண்டில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் பல்வேறு பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு விளம்பரப்படுத்தப்படும் அறிவிக்கைகள், தேர்வு நடைபெறும் நாட்கள், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் நாட்கள் (உத்தேசமாக), நேர்காணல் மற்றும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் நாட்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய தேர்வு கால அட்டவணை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் சேர்மன் பாலசுப்பிரமணியன் ஓராண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிடுகிறார். நிகழ்ச்சியில், டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஓராண்டில் நிரப்ப வேண்டிய காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை தமிழக அரசிடம் இருந்து டி.என்.பி.எஸ்.சி. பெற்றுள்ளது. அதன்படி, வி.ஏ.ஓ, குரூப் 1, குரூப் 2, குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட சுமார் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படலாம் என்று கூறப்படுகிறது. ஓராண்டு கால அட்டவணை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் உடனடியாக வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.