பொங்கல் விடுமுறையில் வகுப்பு: பெற்றோர் அதிர்ச்சி - DINAMALAR

சேலம்: சேலத்தில், ஒரு சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், பொங்கல் விடுமுறையிலும் செயல்பட்டது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், முக்கிய திருவிழா மற்றும் பண்டிகை சமயங்களில், அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதில், அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், 'சிறப்பு வகுப்பு' என்ற பெயரில், பள்ளிக்கு, குழந்தைகளை வர கட்டாயப்படுத்தும் சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில், பொங்கல் பண்டிகைக்காக, ஜனவரி, 15, 16, 17ம் தேதிகளில், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் சில பள்ளிகள், நேற்று, சிறப்பு வகுப்பு நடத்தின. இச்சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவல் அறிந்த, மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமையிலான, பா.ஜ.,வினர், சேலம் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக சிறப்பு வகுப்புகளை ரத்து செய்து, மாணவ, மாணவியரை அனுப்பி வைக்கும்படி, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.