தேர்வு பணியை புறக்கணிக்க முதுகலை ஆசிரியர்கள் முடிவு - DINAMALAR

திண்டுக்கல் : சீனியர், ஜூனியர் பிரச்னையால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வு பணியை புறக்கணிக்க முதுகலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வு மாநிலம் முழுவதும் 400 மையங்களில் நடக்கின்றன. இதில் 2 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு பணியில் துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்களாக உயர்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்முறை ஆணைகளில் தெரிவித்துள்ளது. ஆனால் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர் பணியில் நியமிக்காமல், தேர்வு கண்காணிப்பாளர் பணியை கல்வித்துறை வழங்கியுள்ளது. எனவே தேர்வு பணிகளை முற்றிலும் புறக்கணிப்பது என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் தேர்வு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத்தலைவர் சலேத்ராஜா கூறியதாவது: உயர்நிலை பள்ளி தலைமைஆசிரியர்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் ஒரே பணிநிலையில் உள்ளவர்கள். தேர்வுக்கான துறைத்தலைவர், கூடுதல் துறைத்தலைவர் பணியில் ஜூனியர் தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கீழ் கண்காணிப்பாளர்களாக சீனியர் முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிவதில் சிக்கல் உள்ளது. இதனால் தேர்வு பணியை புறக்கணிக்க உள்ளோம், என்றார்.