அனைத்துக் கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ்.: அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தல்

மாணவர்கள் படிப்பின் பாதியில் விருப்பப் பாடத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான விளைவுசார் புள்ளி தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அனைத்துக் கல்லூரிகளும் அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

சி.பி.சி.எஸ். திட்டத்தை யுஜிசி ஏற்கெனவே அறிமுகம் செய்து, அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது. அதன்படி, சில பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.

 இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த 6-ஆம் தேதி கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். திட்டத்தை அறிமுகம் செய்யவேண்டும் என ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது.

 எனவே, கல்லூரிகள் வரும் 2015-16 கல்வியாண்டில் இத் திட்டத்தை அறிமுகம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.