சாதாரண காய்ச்சல் என அலட்சியம் வேண்டாம்:பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை:டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், 'சாதாரண காய்ச்சல் என, அலட்சியம் வேண்டாம்; நீங்களாகவே கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி போடாமல், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள்' என, சுகாதாரத் துறை எச்சரித்து உள்ளது.

தமிழகத்தில், மூன்று மாதமாகவே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது, இதன் தாக்கம் அதிகமாகி உள்ளது. ராஜபாளையம், நெல்லையிலும் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.இந்த நிலையில், பன்றிக் காய்ச்சலும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. சென்னையில், ரயில்வே ஊழியர் சீனிவாசன், சிகிச்சை பலனின்றி இறந்தார். மர்ம காய்ச்ச
லால், ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சுகாதாரத்துறை மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகள், கல்வித் துறையும் கைகோர்த்து விழிப்புணர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. சாதாரண காய்ச்சல் என, மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்; விழிப்போடு இருங்கள் என, சுகாதாரத்
துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:
டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. பன்றிக்காய்ச்சல் முன்பு போல் வீரியம் இல்லை; சாதாரண பருவ காய்ச்சல் தான் என, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இருந்தபோதிலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, பிற நோய் பாதிப்புகள் உள்ளபோது, காய்ச்சலும் வந்தால் பிரச்னை பெரிதாக வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.சாதாரண காய்ச்சல் தானே என அலட்சியம் காட்ட வேண்டாம்; சுய வைத்தியமும் வேண்டாம். டாக்டர்கள் அறிவுரையின்றி, மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டாம். லேசான காய்ச்சல் இருந்தாலும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள். தும்மும் போதும், இருமும் போதும் மற்ற வர்களுக்கு பரவாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.