இந்திய விளையாட்டு ஆணையம் அளிக்கும் சிறப்பு பயிற்சியில் சேர விருப்பமா?

இந்திய விளையாட்டு ஆணையம் அளிக்கும் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
             இந்திய விளையாட்டு ஆணையத்தின் ராஜிவ்காந்தி சிறப்பு சரக விளையாட்டு மையம், மயிலாடுதுறையில் உள்ளது. அங்கு சிறப்பு பயிற்சி பெற, விளையாட்டு வீரர், வீராங்கனையர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மையத்தில் தங்கி இருந்தோ அல்லது வெளியில் தங்கியோ, பயிற்சி பெறலாம்.

தகுதி
பயிற்சி பெற விரும்புவோர், 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். தடகளம், கூடைப்பந்து, வாலிபால், பளு தூக்குதல், கபடி வீரராக இருக்க வேண்டும். பிரிவு-1ன் கீழ், நேரடி சேர்க்கை தேர்வுக்கு, தேசிய, மண்டல மற்றும் மாநில போட்டிகளில், முதல் 3 இடங்கள் பெற்றிருக்க வேண்டும்.

தனிநபர் விளையாட்டில் முதல் 3 இடங்கள்; குழு விளையாட்டில், கடந்த 2 ஆண்டுகளில், தேசிய மற்றும் மாநில போட்டிகளில் முதல் 2 இடங்கள் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு-2ன் கீழ், திறன் அடிப்படையிலான தனிநபர் விளையாட்டு தேர்வுக்கு, மாவட்ட, கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் அல்லது மத்திய அரசின் கேந்திரிய, நவோதயா பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில், முதல் 3 இடங்கள் பெற்றிருக்க வேண்டும்.

குழுப்போட்டி விளையாட்டுக்கு, மாவட்ட மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் அல்லது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில், முதல் 2 இடங்கள் பெற்றிருக்க வேண்டும்.

சிறப்பு தகுதியாக, உயரமான மாணவர்களுக்கு வாலிபால், கூடைப்பந்து போட்டி பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சேர்க்கைக்கு பின், மாணவ, மாணவியர் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை, விடுதியில் இருந்தபடி தொடரலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர், 3 போட்டோ, பிறப்பு, இருப்பிட சான்று, ரேஷன் கார்டு, கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ்களுடன், அரசு டாக்டரால் அளிக்கப்பட்ட உடற்தகுதி சான்றிதழுடன் (அசல் மற்றும் நகல்), வரும் 22ம் தேதி காலை 8:00 மணிக்கு, மயிலாடுதுறை, ராஜன் தோட்டம், இந்திய விளையாட்டு ஆணையம், ராஜிவ்காந்தி சிறப்பு சரக விளையாட்டு மைய அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணத்தை, மையமே செலுத்திவிடும். மேலும் விவரம் அறிய 04364 - 240 090 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அம்மையம் அறிவித்துள்ளது.