பொங்கல்பண்டிகையையொட்டிபோக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி போக்குவரத்து கழகம் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1.37 லட்சம் ஊழியர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 800 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

இந்தியாவிலேயே முதன்மை நிலைக்கு தமிழகத்தை அழைத்துச் செல்லும் முதல்-அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களும், பணியாளர்களும் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள்.

சாதனை ஊக்கத் தொகை

அத்தகைய தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் சிறப்பான வாழ்க்கை தரம் அமைத்துக் கொடுத்தால் தான், தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தி அவர்கள் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் செயல்பட முடியும்.

அதற்கேற்ற வகையில், வரும் பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களில் 2014-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கு குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கு குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக “சாதனை ஊக்கத்தொகை’’ வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆணையின் காரணமாக போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 800 பணியாளர்களுக்கு, மொத்தம் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

நுகர்பொருள் வாணிபக் கழகம்

2013-14-ம் ஆண்டில் போனஸ் தொகை பெற்றுள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவினர்கள் மொத்தம் 37 ஆயிரத்து 693 பணியாளர்களுக்கு 2014-ம் ஆண்டிற்கான செயலாக்க ஊக்கத் தொகையாக ஒவ்வொரு பணியாளருக்கும் ரூ.350 வீதம், 2015-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதற்கான செலவினம் 1 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 550 ரூபாயாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.