அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பயிற்றுநர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களை எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டாய இடமாற்றம் செய்வதை கண்டித்து வெள்ளிக்கிழமை மாலையில் பயிற்றுநர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

      விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளமையங்களில் ஆசிரியர் பயிற்றுநர்களாக 55 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருச்சி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், ஆசிரிய, ஆசிரியை பயிற்றுநர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திடீரென மாற்றப்பட்டுள்ளதால் தொடர்ந்து ஊதியம் பெற முடியாத நிலையேற்படும். இதையடுத்து மாறுதல் உத்தரவை பெற மறுத்தும், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அதிகாரிகளை கண்டித்தும் அலுவலக வளாகம் முன்பு பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     இது தொடர்பாக அனைவருக்கும் கல்வி இயக்கத்திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், இம்மாவட்டத்தில் இத்திட்டத்தில் போதுமான நிதி இல்லை. அதனால் பயிற்றுநர்களுக்கு கடந்த மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிறது. அதனால், இத்திட்டத்தில் நிதியுள்ள மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 15 மாவட்டங்களில் உள்ள பயிற்றுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், இம்மாவட்டத்திலும் 55 பேர் மாற்றப்பட்டனர். இது தொடர்ந்து ஊதியம் பெறும் வகையில் தாற்காலிகமான ஏற்பாடுதான், அதையடு்த்து 3 மாதங்களுக்கு பின் கூடுதல் பொறுப்புடன் ஏற்கனவே பணியாற்றிய இடங்களிலேயே வேலை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அறியாமல் ஆசிரிய பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவி்த்தார்.