முதுகலை தமிழியல் படித்தவருக்கு தமிழாசிரியர் பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கி
ளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் மனுதாரர் ஜி. கலைவேந்தன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த
நீதிபதி கே. ரவிச்சந்திர பாபு பிறப்பித்த உத்தரவு விவரம்: மனுதாரர்
கலைவேந்தன் பி.லிட் (தமிழ்), எம்.ஏ. தமிழியல் மற்றும் பி.எட்.
முடித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலைத் தமிழாசிரியர்
பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர், 2012
செப்டம்பர் 27இல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு, அனைத்து
சான்றிதழ்களையும் சமர்ப்பித்துள்ளார். அப்போது, எம்.ஏ. தமிழியல் படிப்பு,
எம்.ஏ. தமிழ் படிப்புக்கு இணையானது அல்ல எனக் குறிப்பிட்டு, அவரைத் தேர்வு
பட்டியலில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியம் நீக்கியுள்ளது.
இதற்கிடையே, மனுதாரர் படித்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு எம்.ஏ.
தமிழ் என திருத்தி புதிய சான்றிதழ் வழங்கியுள்ளது. இருப்பினும், அதை
ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஒரு இடத்தை ஒதுக்கி வைக்க
வேண்டும் என்றும், பதில் மனு தாக்கல் செய்யவும் ஆசிரியர் தேர்வு
வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வு வாரியம் பதில்
மனு தாக்கல் செய்யவில்லை. வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், தஞ்சை
பல்கலைக்கழகம் வழங்கியுள்ள சான்றிதழ் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க
கேட்டுக் கொண்டுள்ளார்.
மனுதாரர் முதுகலை தமிழ் முடித்திருக்கிறார் என்பதற்கான சான்றிதழை
பல்கலைக்கழகம் திருத்தி வழங்கியுள்ளது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம்
பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை முதுகலைப் பட்டதாரி
ஆசிரியராக நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் 4 வாரங்களில் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.