ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு: தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பம்

சேலம்: வரும் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ, இரண்டாண்டு படிப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இத்தேர்வில் தேர்ச்சி பெற தவறி, வரும் 2015, ஜூன் மாதத்தில் நடக்கும் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில், கலந்து கொள்ள விரும்புபவர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை , ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். அதில், கூறப்பட்டுள்ள தகுதி மற்றும் அறிவுரைகளை பின்பற்றி, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலை, கண்டிப்பாக இணைந்து, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக, சமர்ப்பிக்க வேண்டும். அங்கு பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா மூலம், போட்டோ எடுக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளதால், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே, போட்டோவுடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அங்கேயே தேர்வுக்கட்டணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரத்தில் உள்ள, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், ஜனவரி, 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.