கல்வித்துறையில் போராட்டம்: தேர்வுப்பணியில் சிக்கல்

திண்டுக்கல்: பதவி உயர்வில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி கல்வித்துறை பணியாளர்கள் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளதால் தேர்வு பணிகள் பாதிக்கும்.

பள்ளிக் கல்வித்துறையில் 8 ஆயிரம் அமைச்சு பணியாளர்கள் உள்ளனர். புதிய பள்ளிகள் அதிகளவில் துவங்கப்பட்டபோதும் அலுவலக பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஒருசிலருக்கு மட்டுமே பதவி உயர்வு கிடைக்கிறது. தற்போது உதவியாளர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு அறிவித்தப்படி இணை இயக்குனர், உதவி இயக்குனர் பணியிடங்களும் 20 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. விரக்தியடைந்துள்ள பணியாளர்கள் இம்மாதமே போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். தற்போது 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் நடப்பதால், அப்பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க செயலாளர் சிவக்குமார் கூறியதாவது: அமைச்சு பணியாளர்களை இணை இயக்குனர், துணை இயக்குனராக பதவி உயர்வு அளிக்கும் அரசாணை 1992 ல் வெளியிடப்பட்டது. கல்வித்துறையில் மட்டும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,' என்றார்.