1807 பணியிடங்களுக்கு 1லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர் எழுதிய முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவை அடுத்த மாதம் வெளியிட டிஆர்பி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள 1,807 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த நவம்பர் 7ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 499 மையங்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 257 பேருக்கு தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இதில், 1 லட்சத்து 90,966 பேர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு முதல் முறையாக விடைத்தாளில் தேர்வரின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது.
தேர்வு முடிந்த நிலையில் விடைத்தாள்கள் அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களில் இருந்து டிஆர்பிக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை தேர்வுக்கு பின் ஏற்பட்ட குழப்பங்கள், வழக்குகள் ஆகியவற்றால் காலதாமதம் ஏற்பட்டதை கவனத்தில் கொண்டு விடைத்தாள் திருத்துவதில் அதிக கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு வினாக்களுக்குரிய கீ ஆன்சர் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விடைத்தாளை இருமுறை ஸ்கேன் செய்து திருத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதம் தேர்வு முடிவுகளை டிஆர்பி வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.