வாட்சிம் கார்டு அறிமுகம்!

150 நாடுகளில் ரோமிங் கட்டணமின்றி வாட்ஸ் அப்பை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு அறிமுகம்
        உலகின் 150 நாடுகளில் ரோமிங் கட்டணம் ஏதுமின்றி ‘வாட்ஸ்அப்’ சேவையை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளமான வாட்ஸ் அப்-க்கு உலகெங்கும் 700 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், அவர்களுக்காக தற்போது வாட்சிம் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது இத்தாலியை சேர்ந்த ஜீரோ மொபைல் நிறுவனம்.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மனுவல் ஜினுல்லா கூறுகையில், “இந்த சேவையின் மூலம் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் போது அதிக அளவிலான ரோமிங் கட்டணங்கள் செலுத்தவோ, இலவச வை-பை கிடைக்கும் இடத்தை
தேடி அலையவோ தேவையில்லை. வாட்சிம்மை பயன்படுத்தி 150 நாடுகளில் வாட்ஸ் அப்பை எல்லையின்றி உபயோகித்து நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம்” என்றார்.
இந்த வாட்சிம்மின் விலையாக 10 யூரோவும் (சுமார் 714 ரூபாய்) உலகம் முழுவதுற்கும் அனுப்பி வைப்பதற்கு ஒரே  கட்டணமாக 5 யூரோவும் (சுமார் 350 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டை பெறவும் ரீசார்ஜ் செய்யவும் வாட்சிம் நிறுவனத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த சிம் கார்டை, உள்ளுர் விநியோகஸ்தர்கள் மூலம் 100 நாடுகளில்  கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஜீரோ மொபைல் திட்டமிட்டுள்ளது.